ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி : பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலையீடு
ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஓமந்தையில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில், நேற்றையதினம் (02) இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் பொலிஸார் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவரிடம் கேள்வியெழுப்பினார்.
இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு
மேலும் தெரிவித்ததாவது, ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இது அமைந்துள்ளது. குறித்த காணியை திங்கட்கிழமை (30) துப்புரவு செய்துள்ளனர்.
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக்காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிஸார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.
அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கை
அத்துடன், தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியாகும்.
அதற்கு பதிலாக ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள காணியில் இருந்து பொலிஸார் இன்னும் வெளியேறாத நிலையில் புதிதாக இன்னுமொரு காணியையும் அடாத்தாக கையகப்படுத்தும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.
இதனையடுத்து பொலிஸாருடன் இடம்பெற்ற நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின் காணி கையகப்படுத்தப்படும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச ஒருங்கினைப்புக்குழுவால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் களஆய்வொன்றினை அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |