யாழில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தம் - உரிமையாளரின் இறுதி முடிவு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பகுதியில், இராணுவத்தின் தேவைக்காக எனக் கூறி காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சுவீகரிப்பு நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்.
இன்று (09.07.2026) காலை காணி அளவீட்டு நடவடிக்கைக்காக, காணி உரிமையாளர்கள் மற்றும் அயல் காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தம்
இதன்படி, காணி உரிமையாளர்கள், அயல் காணி உரிமையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், மருதங்கேணி வட்டார பிரதேச உறுப்பினர் கிட்டு உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மருதங்கேணி வடக்கு மற்றும் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் அங்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்கப்பட்டால் அயல் காணிகள் உட்பட கிராம மக்களின் மேலும் பல காணிகளும் இராணுவ முகாமுடன் இணைத்து சுவீகரிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆபத்துகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், காணி உரிமையாளரிடம் இருந்து காணியை இராணுவத்திற்காக பெற்றுக்கொள்ளும் முயற்சி நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், அப்பகுதியில் 30 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இருந்தபோதிலும், அவற்றில் 20 ஏக்கர் காணியை மட்டும் அடையாளப்படுத்தி சுவீகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த காணி உரிமையாளர், குறித்த காணியை அளவீடு செய்ய வேண்டாம் என நில அளவைத் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.



சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan