லால்காந்த பௌத்த மதத்தை இழிவுபடுத்துகின்றார் – நாமல் ராஜபக்ச
விவசாய அமைச்சர் லால்காந்த பௌத்தமதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை நாயக்க தேரரை இழி சொல் கொண்டு அழைத்து அவமதித்துள்ளதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு ஒரு பௌத்த மத தலைவரை அவமதிப்பதை தாம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். ICCPR சட்டத்தின் படி, “யுத்தத்தைத் தூண்டும் வகையிலும், வேறுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத அடிப்படையிலான வெறுப்பைத் தூண்டுதல் எவராலும் மேற்கொள்ளப்படக் கூடாது” என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படுவதாக இருந்தால், பௌத்தமத தலைவர்களை இலக்காகக் கொண்டு செய்யப்படும் அவமதிப்புகள் மற்றும் மத வெறுப்பை பரப்பும் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ICCPR சட்டத்தின் கீழ் அமைச்சர் லால்காந்தாவுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஒரு சாதாரண குடிமகன் அல்லது எதிர்க்கட்சியினர் இதுபோன்று சட்டத்தை மீறியிருந்தால், இதற்குள் கைது செய்யப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மத வெறுப்பை பரப்புதல் மற்றும் மகா சங்கத்தினருக்கு அவமதிப்பு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காக்கிறது எனவும் அவர் விமர்சித்தார்.
அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கை வரலாற்றில் இதுபோன்று எந்த அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வளவு கடுமையான அவமதிப்பு செய்ததில்லை என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri