நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன்! சிறுபான்மையினரை விமர்சிக்கவில்லை - விளக்கம் கூறும் லக்ஸ்மன் கிரியெல்ல
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரருடனான சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட அரசியல்வாதியான லக்ஸ்மன் கிரியெல்ல, தனது விமர்சனம் அரசாங்கத்திற்கு எதிரானது தானே தவிர, சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான வழக்கை கையாளும் விதத்தின் ஊடாக, சிறுபான்மையின சமூகங்களின் ஆதரவை வென்றெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக கிரியெல்ல கூறியதாக முன்னதாக, செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் (16.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விமர்சனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அரசாங்கத்தையே விமர்சித்தேன், சிறுபான்மையினர் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை.

என்னை விமர்சிப்பவர்கள் மகாநாயக்க தேரருடனான சந்திப்பில் நான் பேசிய முழுமையான கருத்துக்களை செவிமடுக்கவில்லை.
அத்துடன், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமின்றி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது ஜனாதிபதி கட்டளையின் மூலம் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியும்.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.