இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவருடன் சந்திப்பை கோரியுள்ள லக்ஷ்மன் கிரியெல்ல
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவர் பிஷப் வின்ஸ்டன் பெர்னாண்டோவுடன் சந்திப்பு ஒன்றை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த சந்திப்பை கோருவதாக தாம் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டிற்கு அடுத்தடுத்து வழங்கி வரும் தகவல்கள் தொடர்பில் உண்மைகளை முன்வைப்பதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும்,
கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் தலைமை என்பன தாக்குதலின் பிரதான குற்றவாளிகளை வெளிப்படுத்த வேண்டும் அபிலாஷையை கொண்டிருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பிரச்சினையை தீர்த்து, மர்மத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் விருப்பமாகும்.
அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த தாக்குதல்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், இத்தகைய தாக்குதல் நடந்தமைக்காக அப்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அப்போதைய அமைச்சர்கள் தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
எனினும் சஹ்ரான் ஹஷீம் மற்றும் தௌவ்ஹீத் ஜமாத் ஆகியோர் உளவுத்துறையுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தனர்.
மேலும் அவர்களுக்கு சம்பளம் கூட வழங்கப்பட்டன. எனவே இந்த ஆதரவை வழங்கியமைக்காக பயங்கரவாத தாக்குதலை தடுக்காத பொறுப்பை அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தாக்குதலின் சாட்சிய சான்றுகள் முப்பத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளன. 457 சாட்சிகளின் சான்றுகள் அந்த பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை எட்டு தொகுதிகளாக இருந்தாலும் முதலாவது மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உளவுத்துறை அதிகாரிகளின் சான்றுகள் பொதுமக்களுக்கு வெளியிடக்கூடாது என்று இதில் கூறப்பட்டுள்ளது.
தெஹிவளை விடுதியில் தம்மை தாமே வெடிக்கவைத்த தீவிரவாதியின் மனைவி அளித்த
சான்றுகள் சிக்கலானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் லக்ஷ்மன் கிரியெல்ல
சுட்டிக்காட்டியுள்ளார்.