குவைத் மீது இரண்டு கட்டங்களாக ஆளில்லா விமான தாக்குதல்! பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகள்
குவைத்தின் அரசுக்குச் சொந்தமான மினா அல்-அஹ்மத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டின் எண்ணெய் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச அளவில் அழைப்புகள் விடுக்கப்பட்ட போதிலும், குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
குவைத்தின் மினா அல்-அஹ்மத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் பல பிரிவுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன, மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அவை மூடப்பட்டுள்ளன.
மேலும், இஸ்ரேல் தாக்குதல் வரவிருப்பதாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்களை ஈரான் கைவிடுவதற்கான அறிகுறி
இதற்கிடையில், ஈரானிய எரிவாயு நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் தற்போது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளையும் குறிவைத்து வருகின்றது.

உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள இந்த போர் அதன் மூன்றாவது வாரத்தின் முடிவை நெருங்கிய நிலையில், வளைகுடாப் பிராந்தியத்தின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் கைவிடுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.