குருந்தூர்மலையில் பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும்: கம்மன்பில
முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் பொங்கல் விழா நடத்தப்போவதாகத் தமிழ் அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர். எனவே குருந்தூர்மலையில் பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.
குருந்தூர்மலையில் நாளை (18.08.2023) நடைபெறவுள்ள பொங்கல் விழா தொடர்பில், பிவிதுரு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் நேற்று (16.08.2023) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பௌத்தர்களை குருந்தூர்மலைக்கு அழைப்பு விடுத்து கம்மன்பில கூறியதாவது, குருந்தூர் மலை விகாரை 2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த புராதன விகாரையை இந்துக்களின் கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோருகின்றனர்.
குருந்தூர் மலையில் ஒன்றிணைய வேண்டும்
அது மட்டுமன்றி நாளை வெள்ளிக்கிழமை குருந்தூர் மலையில் பொங்கல் விழா நடத்தப்போவதாகவும் அதற்குத் தமிழர்களை வருமாறும் தமிழ் அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.
எனவே புத்த சாசனத்தைப் பாதுகாக்கப் பௌத்தர்கள் குருந்தூர்மலையில் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன் குருந்தூர் மலையில் பௌத்த-இந்து மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
சிங்களவர்களின் இருப்பு
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு வடக்கிற்கும் தெற்குக்கும் இடையில் முரண்பாட்டையே தோற்றுவித்துள்ளார்.
நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கள் முழுமையாகத் தமிழ் பிரிவினைவாதிகளால் அழித்தொழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




