எதிர்வரும் 27ஆம் திகதிக்கு தவணையிடப்பட்ட குருந்தூர் மலை தொடர்பான வழக்கு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு
இந்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் (13.10.2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குருந்தூர் மலை ஆதிஐயனார் ஆலய நிர்வாகம் சார்பிலான சட்டதரணிகளும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சார்பில் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளும் மற்றும் பௌத்த பிக்கு சார்பிலான சட்டதரணிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அவர் சார்பிலான சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் கூறுகையில், குருந்தூர் மலை பௌத்த பிக்கு சார்பிலான சட்டதரணிகள் மன்றில் முன்னிலையாகியுள்ளதுடன், அவர்களின் சமர்ப்பணத்தில் 2020ஆம் ஆண்டு மன்றில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் படி உரிய திணைக்களங்களுக்கு அறிவித்து அதன் அடிப்படையிலேயே குருந்தூர் மலையில் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதைந்து கிடக்கும் தமிழர்களின் பூர்வீக பூமி: திடீரென வெளிவந்த எட்டு முக லிங்கம் - நடப்பது என்ன..! |
தவணையிடப்பட்ட வழக்கு
இதேவேளை ஆதிஐயனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டதரணிகள் தமது தரப்பிலான வாதங்களை மன்றில் முன்வைத்து இன மத முரண்பாடுகள் ஏற்படுத்தும் வகையில் புதிதாக தொடர்ந்தும் குருந்தூர் மலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் அடுத்து வழக்கின் கட்டளைக்காக எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடபட்டுள்ளது.