குளியாப்பிட்டிய இளைஞர் கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய அரசியல்வாதிகள்
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள மற்றுமொரு சக்திவாய்ந்த அரசியல்வாதியிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுசித் ஜெயவம்ச என்ற இளைஞன்,கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போது காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாதம்பே பன்னிரெண்டாம் காட்டுப்பகுதிக்குள் இருந்து இளைஞனின் சடலத்தை மீட்டிருந்தனர்.
கொலைக்கான காரணம்
குறித்த இளைஞன், 17 வயது யுவதியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி திருமணம் செய்துக்கொள்ள மறுத்தமையே கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் காதலிக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரின் மனைவி இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரின் உறவினர் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரான பெண்ணிக் தந்தை (சிகிதி) மற்றும் அவரது மனைவியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்போம் என கூறி ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்
மேலும், இக்கொலையின் பிரதான சந்தேகநபரான சிகிடி வடமேற்கு மாகாணத்தில் உள்ள பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சட்டத்தரணிகளான இரண்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளிடமும் சிகிதி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொலைபேசி வலையமைப்புகள் தொடர்பான விசாரணையின் போது, சிகிடி அந்த நாட்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன் பிரகாரம் எதிர்காலத்தில் ஏனைய அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், இளைஞனை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், ஆனால் இறந்த விதம் இதுவரையில் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுசித் ஜெயவம்சவின் காதலி என கூறப்படும் சிகிதியின் 17 வயது மகள் வீட்டில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முடிவதற்கு சுமார் 06 வாரங்கள் ஆகும் என ஹலவத்தை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எஸ். அன்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |