காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞன் மாயம் : அரசியல்வாதியிடம் பல மணிநேரம் விசாரணை
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச்சென்ற போது கடத்திச்செல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற இளம் வர்த்தகர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வாக்குமூலம் பதிவு
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞன் கடத்தப்படுவதற்கு முன்தினம் முன்னாள் முதலமைச்சருக்கு இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ( காதலியின் தந்தை) தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் அவரிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தனது மகளின் பிரச்சினை தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்று பொலிஸில் முறைப்பாடு செய்து சம்பவத்தை தீர்த்து வைக்குமாறு தெரிவித்ததாக அதுல விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், இளைஞனின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam