மாவையின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ள இந்திய அரசியல்வாதி
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறப்பிற்கு தமிழக அரசியல்வாதியான கே. எஸ். ராதாகிருஷ்ணன் தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தப கணக்கில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"எனது அருமை நண்பர் இலங்கை மாவிட்டபுரம் சோமசுந்தர சேனாதி ராஜா கடந்த திங்கட்கிழமை தவறிக் கீழே விழுந்து மண்டையில் காயம்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிப்பான நிலையில் யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 29.1.2025 அன்று இரவு 9 மணி அளவில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. தகவலை அவரது புதல்வன் அமுதன் எனக்குத் தொலைபேசியில் கண்ணீரும் கம்பலையுமாகத் தெரிவித்தார். மாவை முதன்முதலாக 1982இல் சென்னைக்கு வந்தார்.
அது முதல் எனது நட்பு அவருடன் தொடர்ந்திருந்தது தனது சிறு வயதுக் குழந்தைகளுடன் தன் குடும்பத்தைத் திருச்சியில் தங்க வைத்திருந்தார். அவரது மகள், மகன் அனைவரும் திருச்சியில் தான் பாடசாலையில் படித்தார்கள். சென்னையில் சிறிது நாள் என்னுடன் இருந்தார்.
நீண்டகால நட்பு
பிறகு தி. நகர் தணிகாசலம் தெரு, மணிமேகலைப் பிரசுரம் மாடியில் சென்று வாடகைக்குக் குடியிருந்தார். ஏறத்தாழ 1989 வரை சென்னையில் தங்கி இருந்தார். அச்சமயங்களில் நடந்த எனது திருமணத்திலும் கலந்து கொண்டார்.
திருமணம் முடிந்த பிறகு, அவர் எங்கள் வீட்டிற்கு வந்து விருந்துண்டுவர அழைத்தார். அவரது மனைவி பவானி அம்மையார் என்று நினைவில் இருக்கிறது. இன்று சேனாதிராஜா அகால மரணம் அடைந்திருக்கிறார்.
சேனாதிராஜா தொடக்கத்தில் ஈழத்தந்தை செல்வாவின் காலத்தில் அவருடன் இணக்கமாக இருந்தவர் அவருக்கு நெருக்கமாக இருந்து அரசியல்ப் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணம் - வீமன்காமம் மற்றும் நடேஸ்வரா கல்லூரிகளில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்து மாவை சேனாதிராஜா, இலங்கை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார்.
எட்டாண்டு காலம் அக்காலத்தில் சிறையில் இருந்தவர். ஈழத்தந்தை செல்வா இறக்கவும் அமிர்தலிங்கத்துடன் நெருக்கமாக ஆனார். வெளிக்கடை, கண்டி, வெளிச்சாலை கைமுனு என சிறைகளில் எட்டு ஆண்டுகள் சிங்கள அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் கைதாகி இருந்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டதன் ஊடாக, அவர் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியிருந்தார். ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தில் 1966ஆம் ஆண்டு இணைந்த அவர், 1969ஆம் ஆண்டு வரை அதன் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
இதையடுத்து, மாவை சேனாதிராஜா இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. சிறையிலிருந்து வெளியில் வந்த மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய பற்றாளர்
வழகம்பரை அம்மன் ஆலய முன்றலில் அமரர் தந்தை செல்வா வெளியிட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை விரைந்து செயற்படுத்த கட்சிக்கு நெருக்குதல் கொடுத்த தமிழ் இளைஞர் பேரவை செயலாளர், 1983 வரை எட்டுச் சிறைச்சாலைகளில் ஏழு வருடங்களைக் கழித்தவர்.
1983 இல் மட்டக்களப்பு மாவட்டசபை தலைவராக இருந்த அமரர் சி.சம்பந்தமூர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்திக்க இளஞர் பேரவை உறுப்பினர்கள் வந்திருந்த போது, வந்தவர்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் கூட கொள்வனவு செய்ய முடியாத மாவட்ட சபைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்க உதவாது எனக்கூறி வட்டுக்கோட்டை தீர்மானமே தீர்வு என பற்றுறுதியுடன் செயற்பட்டவர். கட்சியின் வரலாற்றை, வளர்ச்சியை துல்லியமாக எடுத்துரைத்த தமிழ் தேசிய பற்றாளர்.
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவது அன்றே, வாழ்க்கை இனிதென மகிழ்ந்தென்றும் இலமே. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆரம்பத்தில், 1970 களில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் சென்னைக்கு வந்த போது சேனாதிராஜா அவருடன் சந்தித்து பேசிக் கொண்டதும் உண்டு. அப்போது சேனாதிராஜா கலைஞரைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த போதும் கூட அவரிடம் தொடர்பில் இருந்தவர் தான் சேனாதிராஜா. ஒரு கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் ஆயுதப் போராட்டத்தை ஏந்த வேண்டி வந்ததன் முக்கியத்துவத்தை மேற்சொன்ன இரு நிலைப்பாடுகளுக்கு இடையே யார் ஒருவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகமுக்கியம்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் ஈழத் தமிழர்களுக்கான வீரச்சமர் மிக நுட்பமான ஆய்வுகளுக்கு உரியது. அந்த நேரத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் சென்னை சேபாக்கம் அரசினர் விடுதியில் தங்கியிருந்தார்.
பல நினைவுகள்...
அவரோடு அந்தக் கட்சியின் தலைவர் சிவ சிதம்பரம், யாழ்ப்பாணம் யோகேஸ்வரன், சாவகச்சேரி நவரட்ணம். வவுனியா சிதம்பரம், திரிகோணமலை சம்பந்தன், ஆனந்த சங்கரி, தங்கத்துரை, போன்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று சென்னையில் தான் தங்கி இருந்தார்கள்.
அன்றைக்கு இவர்களுக்கு நான் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததெல்லாம் உண்டு. தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் சேனாதிராஜாவைச் சந்திக்க விரும்பினர். அவரிடம் மாவையை அண்ணா சாலை அருகே எக்ஸ்பிரஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது ஏஎன்எஸ் இலங்கைப் பிரச்சினை குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.
அந்த நேரத்தில் சேனாதிராஜா ஈழ மாணவர்கள் இங்கு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று பலருக்கும் உதவ கேட்டுக்கொண்டார்.
அப்படிப் பள்ளியில் சேர விரும்பிய அவர்கள் எல்லாருக்கும் நான் உதவியாக இருந்தேன். அப்போது என் உறவினர் களாம்பட்டி டாக்டர் வேங்கடசாமி சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வராக இருந்தார்.
என் வேண்டுதலின்படி அன்றைக்கு பல ஈழ மாணவர்களைத் தன் கல்லூரியில் சேர்த்துக் கொண்டார். பிறகு பச்சையப்பன் கல்லூரி நந்தனம் அரசினர் கல்லூரிகளில் ஈழ மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல ஈழ மாணவிகள் சிலரை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி எத்திராஜ் கல்லூரிகளில் சேர்க்கும் பொருட்டு நானும் சேனாதிராஜாவும் சென்றது உண்டு. அதேபோல் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரும் சில மாணவர்களைக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்வார். அது மறக்க முடியாத ஒரு இனிமையான காலம்.
அரசியல் பணிகள்
மயிலாப்பூரில் ஒரு ஆண்டு காலம் என் வீட்டில் தங்கி இருந்தது கொண்டு காலையில் எழுந்தவுடன் அமிர்தலிங்கத்தோடு சேனாதிராஜா இணைந்து சில பணிகள் ஆற்றியதும் உண்டு. அவர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பணிகளைச் செய்து கொண்டிருப்பார். அமிருக்கை பக்கபலமாக சேனாதிராஜா எழுதுவது அறிக்கைகள் தயார் செய்வது என்கிற முறையில் உதவியாக இருப்பார்.
சேனாதிராஜா பார்ப்பதற்கு திடகாத்திரமான உடம்போடு நல்ல உயரத்துடன் இருப்பார். அப்போது அவர் உயரத்திற்குப் பொதுவான வேட்டிகள் மயிலாப்பூர் கடைகளில் கிடைப்பதில்லை கிடைத்தாலும் முழங்கால் அளவே வரும். ஆகவே அவர் நீண்ட வேட்டியை கட்டுவார். அவர் குறித்து இப்படிப் பல நினைவுகள்.
1989இல் அவர் இலங்கை திரும்பிய பின் மூன்று நான்கு முறை நான் இலங்கை சென்ற போது யாழ்ப்பாணத்தில் வைத்து அவரைச் சந்தித்து இருக்கிறேன். மாவிட்ட புரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றால் மிக சிறப்பான வரவேற்பும் விருந்து முறையும் யார் வந்தாலும் வரவேற்கும் பண்பும் பசியார வைத்து அனுப்பும் பழக்கமும் உண்டு.
ஒருமுறை தினமணி ஆசிரியர் வைத்தியநாதனையும் கவிஞர் இளைய பாரதியையும் அழைத்து கொண்டு சென்ற போது முழுமையாக யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தும் அவரது வாகனத்திலேயே திரிகோணமலை வரை சம்பந்தைத்தை சந்திக்க வைத்து விட்டு மீண்டும் எங்களைக் கொழும்புவிற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
அதேபோல் முள்ளிவாய்க்காலுக்கும் அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் அந்த துயரங்கள் நடந்து முடிந்திருந்த நேரம். அதுபோல அவருடன் இலங்கை முழுக்க பயணம் செய்த காலங்களும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு நான் எனது சொந்த வீடு போல சென்று வந்ததும் உண்டு.
நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தாலும் அவரோடும் அமிர்தலிங்கத்தோடும் சிவ சிதம்பரத்தோடும் யோகேஸ்வரனோடும் நட்பைப் பேணி இருந்தோம். இவ்விடயத்தில் பார்க்கும்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், சேனாதிராஜா, கவிஞர் காசி ஆனந்தன் போக குட்டிமணி ஜெகன், வழக்கறிஞர் கரிகாலன் போன்ற இவர்கள் தான் ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆரம்பகட்ட சில ஆட்கள்.
இறுதிக்காலம்
அங்கு சிறுகச் சிறுக ஏற்பட்டிருந்த சிங்கள முரண்பாடுகளுக்கிடையே ஈழ விடுதலை பற்றியும் ஈழ சுயநிர்ணய உரிமைகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தவர்கள். கவிஞர் காசி ஆனந்தனுக்கும் கரிகாலனுக்கும் கூட வாய்ப்பு இருந்தும் நாடாளுமன்றத்தில் செல்ல முடியவில்லை.
இப்படியாக சேனாதிராஜாவின் தீவிரமான அரசியல்ப் பணிகளுக்குப் பல பெருமைகள் இருந்தாலும் கூட அவர் இறுதி நாட்களில் மிகுந்த மனச்சோர்வோடு இயக்கத்தில் இருந்ததாகவும் அவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவரது மகன் அமுதன் மிக சிறந்த அரசியல்ப் பின்னணி உள்ளவர். நான் ஈழத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி ஏதேனும் தகவல் வேண்டுமென்றால் அவரது மகன் அமுதனுக்குத் தான் அழைப்பை ஏற்படுத்துவேன். தொலைபேசியில் தேவையான தகவல்களைக் கொடுப்பார்.
அதேபோல இலங்கையில் எழுதப்படும் நூல்களையும் கூட எனக்கு அனுப்பி வைப்பார். அங்கு நிலவிய அரசியலில் நீண்ட காலம் இருந்திருந்தால் சேனாதிராஜா ஒரு முக்கியமான அரசியல் புள்ளியாக மாறி இருப்பார்! ஏனென்றால் இலங்கை அரசியலின் வரலாறு முழுக்கத் தெரிந்தவர்! எந்தச் சந்தேகம் கேட்டாலும் அதைச் சரியாக விளக்கி சொல்வார்!
அந்த காலத்தில் தாடி வளர்த்துக் கொண்டு ஒரு வகையான கர்ச்சிப்பைத் தலையில் கட்டி அதை பின்னாடி முடித்து போட்டுக் கொள்வார்கள். அதை வாடிக்கையாக அணிந்து கொண்டு ஒரு புரட்சியாளர் போல சேனாதிராஜா இருப்பார். சேகுவாரா போன்றவர்கள் பற்றிய நூல்களையும் தமிழ்நாட்டில் வ உ சியுடைய நூல்களையும் அவர் வாசிப்பது உண்டு.
சுபாஷ் சந்திர போஸையும் படிப்பார். பகத்சிங் உட்பட இவர்களெல்லாம் தியாகத் தலைவர்கள் என்று அவர் சொல்வதுண்டு. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கியப் பழக்கம் உண்டு. டெசோ மாநாடு நடக்கும்போது தலைவர் கலைஞரிடம் சேனாதிராஜாவை அழைத்துக் கொண்டு சென்றேன் இறுதியாக அவர் சென்னைக்கு வந்த போது நான் திமுகவில் இருந்தேன். அப்பொழுது முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க வைத்தேன். உடன் தங்க ராஜாவும் வந்திருந்தார்.
அதே நேரத்தில் அங்கே இ வி கே எஸ் இளங்கோவனும் வந்து போது நீண்ட நேரம் சந்தித்துப் பேசிக் கொண்டு இருந்ததெல்லாம் உண்டு. இப்படியாக சேனாதிராஜா ஈழத்தின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக பொறுப்பு மிக்கவராக அதற்காக சிந்தித்தவராக உழைத்தவராக இருந்தார். சேனாதிராஜா மிகுந்த மென்மையானவர் ! தீவிரத்தை வெளிக்காட்ட மாட்டார்.! மிகுந்த திடகாத்திரமான மன உறுதியுடன் எந்த சோதனை வந்தாலும் தாங்கத் தயாராக இருந்தவர்.
அவர் இன்று இல்லை என்பது குறித்து தனிப்பட்ட முறையில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அன்னார் அவர்களின் தூயப்பணிகள் முடித்த அவருக்கு அஞ்சலிகள் செய்து வணங்குகிறேன். இன்று அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை” என குநிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |