விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக தன்னை நினைத்த கே.பிக்கு கடும் பாதுகாப்பு! தென்னிலங்கையில் இருந்து கேள்வி
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை சீரழித்த யுத்தம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது நாடு விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால், 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக, எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும்.

ஆனால், இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கின்றதா? மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாருக்காவது வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றோம்.
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நான்தான் என சொல்லிக் கொண்ட குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை.
ஆனால், விடுதலைப் புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO