”கே.பி மற்றும் கருணா” வை சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள யதார்த்தங்கள்!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்டபோதிலும், அது தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதை தடுக்கவில்லை.
அதேநேரம் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளநிலையில் வடக்கில் தற்போதும், போரில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல்களின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக மரியாதை செலுத்தப்படுகிறது.
எனவே ஒரு நாட்டுக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் அவசியமில்லை என்று கூறமுடியாது.
ஆனாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துவதை போன்று சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அந்த சட்டம் திருத்தப்படவேண்டும் என்று முன்னணி ஆங்கில அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தெளிவான சாட்சியங்கள் இருந்தால் மாத்திரம், பயங்கவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை தொடர்பிலேயே இந்த கருத்தை ஆங்கில அரசியல் பத்தி எழுத்தாளர் எம்.எஸ்.எம் ஐயூப் தெரிவித்துள்ளார்.
ஒரு குற்றவாளிக்கு கூட மனித உரிமைகள் உள்ளன, அவை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட வேண்டும், இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையாகும்.
எனவேதான், ஒரு சந்தேகத்துக்குரியவரை ஓரிரு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சாதாரண சட்டம் வழிவகை செய்கிறது.
இந்தநிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற விசேட சட்டங்களின் கீழ் சந்தேகத்துக்குரியரை, வருடக்கணக்கில் தடுத்து வைத்திருப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
அத்துடன் வற்புறுத்தலின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை கொண்டு அவருக்கு எதிரான ஆதாரமாக அதனை பயன்படுத்துவதை எவ்வாறு நியாயப்படுத்தமுடியும் என்றும் எம்.எஸ்.எம் ஐயூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, சிலரை பல தசாப்தங்களாக விளக்கமறியலில் வைப்பது அவர்களுக்கு உளவியல் ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சரியான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை நீதி அமைச்சர் அலி சப்ரியும் ஆமோதித்திருந்தார்.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்த கருத்துக்களை கூறி எட்டு மாதங்கள் கடந்தபோதிலும், அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பரிந்துரையின்படி பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது சரணடைந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளை ஏன் அதிகாரிகளால் விடுவிக்க முடியாது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு காலத்தில் பயங்கரமான பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக இருந்தமை காரணமாக அவர்களை விடுவிக்க முடியாது என்று யாராவது வாதிட்டால், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்ற அதே பயங்கரவாதக் குழுவின் தலைவர்களை எவ்வாறு நோக்குவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்ற கே.பி என்ற செல்வராசா பத்மநாதன், 2009 மே மாதம் மலேசியாவில் இருந்து இலங்கை புலனாய்வு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டாவிட்டால், அவர், சர்வதேச தொடர்புகளை கைவிட்டு வடக்கில் சிறுவர் இல்லத்தை நடத்திக்கொண்டிருப்பாரா?
அத்துடன் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், பிரபாகரனின் கோபத்திற்கு ஆளாகாமல் இருந்திருந்தால், 2004ல் தனித் தமிழ் நாடுக்கான தனது போராட்டத்தைக் கைவிட்டு, மகிந்த ராஜபக்சவின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருப்பாரா? என்றும் எழுத்தாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தை குறைக்க இவ்வாறான பல வழிகள் உள்ளதாக பத்தி எழுத்தாளர் எம்.எஸ்.எம் ஐயூப் தெரிவித்துள்ளார்.



