ஹட்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சை
ஹட்டன் - கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது என தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நேற்று(14.01.2026) அதே இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
லொப்கில் பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 பேருக்கு இருபத்தையாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான 13 பேருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
போராட்டத்திற்கான காரணம்
இது குறித்து கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி யாகுலமேரி கருத்து தெரிவிக்கையில்,
இந்த வட்டாரத்தில் தேர்தல் வெற்றி பெற்றவர் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் புஸ்பா விஸ்வநாதன் அவர்கள் மக்களை திரட்டி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அது ஒரு பொய்யான போராட்டம், இங்குள்ள 24 பேருக்கு பணம் கிடைத்துள்ளது மிகுதியாக உள்ளவர்களுக்கு நாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கும்.
லொப்கில் இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் அவர் கிடைக்காத மக்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.
இதனை கேள்வியுற்றே அவர் இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளார். அது மாத்திரமன்றி இன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எந்த எதிர் கட்சி உறுப்பினரும் சென்று சிரமதான பணியிலோ அல்லது மக்களுக்கு உதவவோ இல்லை.
ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அதுவும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு அரசியல் இலாபம் தேடி வருகிறார்கள்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவ்வாறான இழிவான அரசியல் செய்யும் கட்சி அல்ல, அது அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செயப்பட்டு வருகிறது என அதனை இன்று மக்கள் உணர்ந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரணம் நிச்சயம் கிடைக்கும்
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு மேல் அவர்களின் கட்சியின் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். எந்தவொரு மழையிலும் பாதிக்கப்படும் பிரதேசம் தான் லொப்கில் பிரதேசம் அப்போது அவர்கள் கடந்த அரசாங்கங்கள் இருக்கும் போது ஏன் இந்த மக்களுக்காக வேறு இடத்தில் வீடு கட்டி தரும்படி குரல் கொடுக்கவில்லை.

காணிகளை பெற்றுக்கொடுக்க சொல்லி போராட்டம் செய்யவில்லை, தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது. அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் கட்டாயம் பெற்றுக்கொடுப்பதே அவர்களின் நோக்கம்.
அத்துடன், தலவாக்கலை பிரதேச செயலகம் என்பது சுமார் லட்சக்கணக்கில் சன நெரிசலை கொண்ட ஒரு பிரதேச செயலகம். எனவே, சேவைகளை முன்னெடுக்கும் போது சில கால தாமதங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.