கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரணானது!
நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் நேற்று (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது.
நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.
இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும்.
இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


