கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: இம்ரான் எம்.பின் விசேட பிரேரணைகள் முன்வைப்பு
கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சில முக்கிய பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டம் நேற்று(28.01.2026) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிவிவகார பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பால் குறிப்பிட்ட சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரேரணைகள்
இதன்படி,
1. தற்பொழுது குறிஞ்சாக்கேணி ஆற்றில் சேவையில் ஈடுபடும் படகுப் பாதையினை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி சேவையில் ஈடுபடும் நேரத்தினை இரவு 8.30 வரை நீடித்தல்.

2. கடலரிப்பு காரணமாக கிண்ணியாவின் கரையோரப்பகுதி தொடர்ச்சியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. தோணாவிலிருந்து உப்பாறு வரையான தற்போதையான வீதியானது மூன்றாவது வீதியாகும். இதற்கு முன்னரிருந்த இரண்டு வீதிகள் கடலுக்குள் சென்றுள்ளன. எனவே, கடலரிப்பை தடுப்பதற்காக கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரை தடுப்புச்சுவர் அமைத்தல்.
3. கிண்ணியா பிரதேசத்தில் விறகு எடுக்கும் தோலினை மேற்கொள்பவர்கள் மிகுந்த கெடுபிடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே, விறகு எடுக்கும் தொழிலினை மேற்கொள்கின்றவர்கள் கெடுபிடிகளின்றி தமது தொழிலினை மேற்கொள்வதற்கு அனுமதிப் பத்திரத்தினை விரைவாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்தல்.
4. அண்மைக்காலமாக கிண்ணியாப்பிரதேசத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன, அதேபோன்று அதிக ஒலியுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களில் சிலர் வேகமாக வீதிகளில் செல்வதனால் பாதுகாப்பாக வீதிகளில் செல்லமுடியாதுள்ளதுடன் பாரிய இடைஞ்சலாகவும் உள்ளதாக பொதுமக்கள் முறையிடுகின்றனர். எனவே, நகர சபை மற்றும் பிரதேச சபைகளும் பொலிஸாரும் இணைந்து சட்டத்தினை இறுக்கமாகப் பயன்படுத்தி இவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் போதுமான அளவு பொலிஸார் இன்மையினால் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, பொதுமக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குவதற்கோ கிண்ணியா பொலிஸாரினால் முடியாதுள்ளதாகவும், இதன் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதுடன், பொலிஸ் நிலையத்தில் வீணான அலைச்சல்களினை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் முறையிடுகின்றனர்.
எனவே, பிரேரணையொன்றினை நிறைவேற்றி கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபரைக் கோர வேண்டும்.
6. தற்போது குறிஞ்சாக்கேணி பால நிர்மாண வேலைகளுக்கு blue births மைதானம் பயன்படுத்தப்படுகிறது. பால வேலைகள் முடிந்த பின்னர் இந்த மைதானத்தை முழுமையாக புனரமைத்தல்.
இந்த கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்தகுமார, தவிசாளர்கள், பிரதேச செயலாளர், திணைக்கள தலைவர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
