கிண்ணியாவில் வான்எல முஸ்லிம் கொலனி அணை உடைப்பு : 800 ஏக்கர் வயல்கள் தண்ணீரின்றி தவிப்பு
கிண்ணியா வான்எல முஸ்லிம் கொலனி பகுதியில் வயல் நிலங்களுக்கு நீர் வழங்கும் பிரதான வான் ஆறு அணை உடைந்ததால், சுமார் 800 ஏக்கருக்கும் மேலான விதைக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு முதல் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
விதைத்து ஆரம்பிக்கும் முக்கியமான கட்டத்தில் ஏற்பட்ட இந்த தடையால், நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் விதைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளனர். எனினும், வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான ‘ஆர்’ அணை உடைந்ததால், வாய்க்கால்களில் நீர் பாய்ச்சி முற்றிலும் நின்றுவிட்டது.

இதனால் முதல் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவாகியுள்ளது. நீர் கிடைக்கவில்லையெனில், விதைக்கப்பட்ட நெல் முளைக்காமல் வீணாகும் அல்லது கருகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விதை, உரம், உழவுக் கூலி உள்ளிட்ட அனைத்து ஆரம்ப முதலீடுகளையும் ஏற்கெனவே செய்துவிட்ட நிலையில், அணை உடைப்பால் அந்தச் செலவுகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் பெரும் சிரமத்தில் விதைத்துள்ளோம். இப்போது தண்ணீர் கிடைக்கவில்லை. உடனடியாக அணையைச் சீரமைத்து, வயல்களுக்கு நீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வாதாரம் அழிவுக்கு தள்ளப்படுகிறது.” அப்பகுதி விசாயிகள், பிரச்சனையை அரச அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.