உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் பாரிய வேலைத்திட்டம்
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 17 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதி உதவியுடன் கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள 17 குளங்கள் புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு 14 குளங்களின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை நிலையங்களின் கீழுள்ள பல்லாய்க் குளம் சின்னக்குளம் வீரமோட்டைக் குளம் மின்னில் குளம் ஈநொச்சி மோட்டைக்குளம் இத்தாவில் குளம் சின்ன இத்தாவில் குளம் திக்குவில் குளம் குஞ்சுக்குளம் மன்னியா குளம் செம்மண்குன்றுக்குளம் தெக்கேரிக்குளம் ஓயாமாரிக்குளம் கோரமோட்டைக்குளம் ஆகிய குளங்கள் புனரமைப்பு பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏனைய மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோக இணைப்பு
இந்நிலையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 29 கிராம அலுவர் பிரிவுகளில் 4811 நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நீர் இணைப்பு குழாய்கள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராம சேவையாளர் பிரிவுகளில் 29 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு முழுமையாகவும் பகுதியளவிலும் குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு விஸ்தரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 46ஆயிரத்து 741 குடும்பங்களுக்கான நீர் வழங்கல் செயற்திட்டத்தில் 14 வீதமான மக்களுக்கே இதுவரை குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டில் இது முழுமைப்படுத்தப்படும் என்றும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |