மான்செஸ்டர் சிட்டி கழக தொடரில் கிளிநொச்சி மாணவன்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் அக்கடமியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்ற இளையோருக்கான உதைபந்தாட்ட தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவனும் கிளிநொச்சி ஸ்ரார் ஈகிள்ஸ் அக்கடமி வீரருமான சுரேஸ்கண்ணா தனுஸ் இடம்பெற்றுள்ளார்.
இந்த அக்கடமியின் 12 வயது பிரிவு அணியில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12
வீரர்களில் இவர் உள்வாங்கப்பட்டுள்ளார்.
பல நாடுகள்
கடந்த மாதம் கொழும்பு ரேஸ்கொஸ் மைதானத்தில் தேசிய ரீதியில் இடம்பெற்ற முதல் கட்ட தெரிவில் முதல் 100 வீரர்களுக்குள் இடம்பெற்று பின்னர் இடம்பெற்ற இறுதிக்கட்ட தெரிவில் இறுதி 12 வீரர்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு இந்த வாய்ப்பினைப் அவர் பெற்றுள்ளார்.
இந்த தொடர் மான் செஸ்டர் சிட்டி கழகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்படும் தொடராக இருப்பதுடன் இதில் U8, U10, U12, U16 வயதுப் பிரிவுகளைக் கொண்ட அணிகள் போட்டியிடுவதுடன் உலக புகழ் பெற்ற பல நாடுகளின் அக்கடமி அணிகள் தொடரில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் நியூ யோர்க் சிற்றி அக்கடமி அணி, அவுஸ்ரேலியாவின் மெல்போர்ண் சிற்றி அணி, ஜப்பானின் ஜோக்ககாமா மறினோ சிற்றி அணி, இந்தியாவின் மும்பை சிற்றி அணிகளுடன் தொடரை நடாத்துகின்ற மான்செஸ்டர் சிற்றி அக்கடமி அணியும் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடரில் வெற்றி பெறும் அணிகள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிற்றி கழகத்தின் அக்கடமிக்கு செல்லுவதற்கான வாய்ப்பு மற்றும் அக்கடமி அணியின் பயிற்றுவிப்பாளர்களின் நேரடி ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |