வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கம் கண்டனம்
கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கமலராஜன் மீது ஓய்வு நிலை பணியாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாகக் கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது .
அவ்அறிக்கையில் மேலும்,
கடந்த 19ஆம் திகதி காலை கல்விப்பணிப்பாளர் அவரது கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து முன்னால் பாடசாலை பணியாளர் ஒருவரால் உடல்ரீதியாக மோசமாகத் தாக்கப்பட்டமை அதிர்ச்சியைத் தருகிறது.
கல்விசார் பணி என்பது சமூக நலனை முதன்மைப்படுத்தும் பணி. இதில் வலயத்துக்கு தலைமை தாங்கும் வலயக்கல்விப் பணிப்பாளர் முக்கியமானவர். தார்மீக அடிப்படையில் இவ்வாறு பணி செய்பவர்கள் வன்முறைக்கு உள்ளாவது என்பது இந்த பிரதேச மக்களின் வன்முறை உணர்வின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அது கிளிநொச்சி வாழ் சகலரது செயலுக்கும் ஒப்பானது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதில் குறிப்பாகத் தனது பணி நிலையில் ஓய்வு பெற்ற ஒரு மூத்த ஊழியர் ஈடுபட்டமையால், இந்த வலய பணிமனை முன்னெடுக்கும் கல்விப்பணிசார் முகாமைத்துவ செயற்பாடுகளைத் தாழ்த்தி மதிப்பிட்டமை, அதிகாரத் துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது.
தலைமை தாங்குபவரை அவரின் வினைத்திறனை உயர்வாக கருதாமையே எனப் பார்க்கப்படுகிறது. இவ்வாறான எண்ணப்பாங்கு தாழ்வான சமநிலை குறைவான நிலை ஏற்பட்டுள்ளமையை காட்டுகிறது. மேலும் இது எமது சமூகம் குறிப்பாகக் கல்விப்புலம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் எதிர்வு கூறுகின்றது.
இந்நிலையில் எதிர்கால சந்ததிக்கான கல்வியைப் புலமை செயற்பாடாக எவ்வாறு தீவிரமாகவும், வினைத்திறனாகவும், கண்ணியமாகவும் முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இதனால் வலயத்தின் பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக உழைப்பவர்கள், ஆளுமைகள் எத்தகு மன உளைச்சலுக்கு ஆளாகுவர் என்பதும், ஏற்கனவே தாழ்நிலையில் இருக்கும் எமது பிரதேச கல்வி பண்பாட்டை முன்னெடுக்க முடியாது சிதைக்கும் செயல் என்பதையும் நாம் இந்த வேளையில் மனவருத்தத்தோடு சுட்டிக் காட்டுகின்றோம்.
கல்விப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே தோல்விக்குப் பொறுப்பு என்ற சமூக நிலை மிகவும் பிற்போக்கானது. மக்கள் அனைவரும் பொறுப்பு என்பதை சமூகம் புரிந்து எங்கு நடந்தாலும் அநியாயங்களைத் தடுத்தல் அவசியம்.
கடந்த காலங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் வன்முறையாளர்கள் தாக்குதல்கள் செய்துள்ளமை, அதற்கு சட்டரீதியாகக் காத்திரமான படிப்பினை தரும் நடவடிக்கைகளை சட்டத்துறை மேற்கொள்ளாமை என்பனவும் இத்தகு மோசமான நிலைக்குக் காரணம் என்பதே எமது கணிப்பு ஆகும்.
எனவே கடமையிலிருந்த வேளை வலயத்தில் புகுந்து தாக்கியமை எமக்கு வேதனை அளிக்கிறது. சமூகம் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். உரியவர்களுக்கு தங்களின் பிரச்சனைகளை அணுகுவதற்கும், சுமுகமாகத் தீர்வுகளை எட்டுவதற்கும் தெரிய வேண்டும் அல்லது பொருத்தமானவர்களின் ஆலோசனைகளை நாடவேண்டும்.
குறித்த வன்முறை மூலம் ஒரு சூழலில் சமநிலையைக் குலைத்துள்ளமை, அசிங்கப்பட்டுள்ளமை இப்பிரதேச கல்வி வரலாற்றுக்கு ஏற்பட்ட கறையாகவே அதிபர் சங்கம் கருதுகிறது.
எனவே வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலைக் கல்விப் பணி செய்யும் சகலர் மீதான அவமதிப்பாகக் கருதுகிறோம். அவ்வாறான அவமதிப்புக்கு யாரும் இச்செயலமைப்பை உட்படுத்த முடியாது என்பதை அனைத்து சமூகத்திற்கும் வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து நடக்காது சூழலை மாற்றும் அணுகுமுறைகளை
சமூகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக் கோரி நிற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.