தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு தடை: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்
இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இது மிக மோசமான ஜனநாயக மறுப்பு மாத்திரமன்றி, தமிழ் இனத்தின் சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு யுத்தமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், கிளிநொச்சி ஊடக அமையம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கிஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
மேற்படி வெளியான அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, விவசாயத் தடை என வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்திய பேரினவாத அரசு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தடைகளைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை
தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூரத் தடை, ஜனநாயக ரீதியாகப் போராடத் தடை, சொந்த நிலங்களில் வாழ்வதற்குத் தடை என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இப்போது தமிழ் எழுத்தாளர்களின் 'எழுத்துச் சுதந்திரமும்' நசுக்கப்படுகின்றது. கிளிநொச்சி எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி, சயனைட் 'எழுத்தால் நான் யுத்தம் செய்கின்றேன்' நூல்கள் தடுத்து வைக்கப்பட்டன.

பின்னர் பயங்கரவாதி, சயனைட் நூல்கள் விடுவிக்கப்பட்டு எழுத்தால் நான் யுத்தம் செய்கின்றேன்' நூல் இன்றுவரை சுங்கப் பிரிவினால் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எழுத்தாளர் சோபாசக்தியின் லைடன்தீவு-மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும், பி. இரயாகரனின் அரசியல் அநாதைகள், ம. மதிவண்ணனின் நெரிந்து, டிலுக்சன் மோகனின் 'படுபட்சி' உள்ளிட்ட மிக முக்கியமான நூல்கள் அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளை அழிக்கும் முயற்சியாகும்.
எழுத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி, சர்வதேச ரீதியில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் குறித்துப் பேசுகின்ற இலங்கை அரசு, உள்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் பேனா முனைகளை முறிக்க முயல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.