தியாகதீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு (Photos)
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு, கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது இன்றையதினம் (15.09.2023) இலங்கைத் தமிழரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
அக்கராயன் - அம்பலப்பெருமாள் சந்தியில் அமைந்துள்ள, அக்கிராச மன்னனின் உருவச்சிலை முன்றலில், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
ஐந்து அம்சக் கோரிக்கைகள்
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பன தியாகதீபம் திலீபனின் கோரிக்கைகளாக காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அக்கராயன், கந்தபுரம் பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.