மூளைச்சாவடைந்த முல்லைத்தீவு தாயின் சிறுநீரக தானம் - இருவருக்கு மறுவாழ்வு வழங்கி நெகிழ்ச்சி
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளை சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாய், கடந்த 15ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இருவருக்கு மறுவாழ்வு கொடுத்த தாய்
இதன்போது, தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக தீவிர சிகிச்சைக்காக உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன், அவரது இரண்டு சிறுநீரகங்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தானமாக வழங்கப்பட்டன.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த உறுப்பு தானத்தின் மூலம், இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.