வறிய குடும்ப நபர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் சிறுநீரக வியாபாரம்-ஒரு சிறுநீரகம் ஒரு கோடியே 50 லட்சம்
வறிய குடும்பங்களை சேர்ந்த நபர்களை ஏமாற்றி பணம் தருவதாக கூறி பொரள்ளை கொட்டா வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக துரிதமாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜேந்திரா ஜயசூரிய நேற்று கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பான விடயங்களை முன்வைத்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஏற்கனவே சிறுநீரகங்களை வழங்கியுள்ள 5 பேர்-அதற்கான பணம் இன்னும் வழங்கப்படவில்லை
ஒரு சிறுநீரகம் ஒரு கோடியே 20 லட்சம் முதல் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஏற்கனவே 5 பேர் குறித்த மருத்துவமனைக்கு சிறுநீரகங்களை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் அவர்களுக்கு அதுவரை அதற்கான பணம் வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை கொட்டா வீதியில் உள்ள தனியார் மருத்துமனையிடம் இந்த நபர்கள் சிறுநீரகங்களை வழங்கியுள்ளனர். சிறுநீரகங்களை வழங்கியவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் 5 மாத குழந்தைக்கு பாலுட்டும் தாய் ஒருவரும் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொழும்பு புளுமெண்டால் பிரதேசத்தில் வசித்து வரும் ஆண் மற்றும் பெண்ணொருவர் ஊடாக இந்த சிறுநீரக வியாபாரம் நடப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் சிறுநீரகங்களை வழங்கும் நபர்களை மருத்துமனையுடன் தொடர்புப்படுத்தும் தரகு வேலையை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பரிசோதனைகளை நடத்தும் மூன்று தனியார் மருத்துவமனைகள்
சிறுநீரகங்களை பெற்றுக்கொள்ளும் போது நடத்தப்படும் பரிசோதனைகளை செய்வது சிரமம் என்பதால், அதனை நாராஹென்பிட்டியில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகள் மூலம் மேற்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மேலும் விசாரணைகளை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்ய உள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
