அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கிடையில் முக்கிய பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த தனது படையினரை அமெரிக்கா திரும்ப பெற்றதை அடுத்து தலிபான்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, பெண்கள் கல்வி கற்கவும், தொழில் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ,அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய போது அங்கிருந்த அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.
எனினும் சில அமெரிக்கர்களும், அமெரிக்க படையினருக்கு உதவியவர்களும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அமெரிக்கா நியமித்துள்ளது. இதேபோல் தலிபான்களும் தமது சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்கான குழுவை நியமித்துள்ளனர்.
அமெரிக்கா-தலிபான் பிரதிநிதிகளுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை தோஹா கட்டாரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, 105 அமெரிக்கர்கள், 95 பச்சை அட்டை பெற்றவர்கள் மற்றும் அமெரிக்க படையினருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியவர்களை மீட்பது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
இதனை தவிர, ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்வி கற்கவும், தொழில் புரியவும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், முதல் முறையாக அமெரிக்கா-தலிபான்கள் இடையில் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றமை முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் சார்பில் கலந்துக்கொள்ளும் பிரதிநிதிகள் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.