எட்டாவது நாளை எட்டிய கேப்பாப்புலவு போராட்டம்! காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று (01.07.2026) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
எட்டாவது நாள்
கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய சந்திப்பின்போது காணி விடுவிப்பு தொடர்பான மக்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு காணி உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதோடு, காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாக சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
அத்துடன் காணி விடுவிப்பை வலியுறுத்தும் கவனயீர்ப்பும் இடம்பெற்றிருந்தது.
போராட்டக்காரர்கள் கோரிக்கை
இதன்போது தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவம் தற்போது பயன்படுத்தி வரும் பகுதிகளை மாற்று அரச அல்லது பொதுக் காணிகளுக்கு மாற்றி, மக்களின் பூர்வீக வாழ்விடங்களை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கேப்பாப்புலவு மக்களின் காணி உரிமைப் போராட்டம் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில் விரைவான தீர்வை எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே வலுத்து வருகின்றது.





