கட்டண நிலுவை மட்டுமன்றி வாடகையும் செலுத்தாத கெஹெலிய
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) தற்போதைக்கு வசிக்கும் வீட்டுக்கு மாதக்கணக்கில் வாடகை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மார்ச் மாதம் தொடக்கம் வாடகை தொகை கிடைக்காததால், கெஹெலியவின் சம்பளத்திலிருந்து உரிய வாடகைப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளருக்கு மத்திய மாகாண முதலமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதம்
அரகலய போராட்ட காலத்தில் கண்டி, அணிவத்த பிரதேசத்தில் இருந்த அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அதனையடுத்து, தற்காலிகமாக இந்த வீடு அவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டுக்கான வாடகைப் பணத்துக்கே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லையெனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இக்கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னரும் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர்ப்பாவனைக்கட்டணங்களை இலட்சக்கணக்கில் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |