குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்த கெஹலிய ரம்புக்வெல்ல
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் புறக்கணித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற தரமற்ற மருந்துபொருள் இறக்குமதி செய்தமை தொடர்பில் மேலதிக விடயங்களை தௌிவுபடுத்துக்கொள்ளும் நோக்கில் அவரை நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை
அதன் பிரகாரம் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று காலை ஒன்பது மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்த கெஹலிய, அதற்காக வேறொரு தினத்தை ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
அதற்கிடையே நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இலஞ்ச வழக்கு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டம் என்பவற்றில் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக அமைச்சராக செயற்பட்ட காலத்தில் மேற்கொண்ட மோசடியொன்று தொடர்பில் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலஞ்ச வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.