நாடு முழுதும் போதைப் பொருட்களை விநியோகித்த சம்பத் மனம்பேரி!
மித்தெனிய சம்பவத்தில் தேடப்படும் இலங்கை பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர் சம்பத் மனம்பேரியே கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரின் போதைப் பொருட்களை நாடு முழுவதும் விநியோகித்துள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விநியோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் சம்பத் மனம்பேரிக்கு ரூ. 600,000 முதல் 700,000 வரை வழங்கப்பட்டதாக பாக்கோ சமன் விசாரணையின் போது தெரிவித்ததாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான சம்பத் மனம்பேரி, பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் சின்னம் கொண்ட அங்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் அந்த சீருடைகளை அணிந்து போதைப்பொருட்களை விநியோகித்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கேரள கஞ்சா
மேலும் இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா தொகையை மன்னாரில் இருந்து தெற்கு நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பத் மனம்பேரியின் சகோதரர், இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரி, தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பொலிஸ் காவலில் உள்ளார்.
அவரது சகோதரர் மனம்பேரியிடம் பல துப்பாக்கிகள் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் மித்தெனியவில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களும் ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மித்தெனியவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை முந்தைய விசாரணைகளில் தெரிய வந்திருந்தது.
அச்சந்தர்ப்பத்தில் கொள்கலன்கள் இரண்டும் இறக்கப்பட்டபோது, பியல் மனம்பேரி மற்றும் சம்பத் மனம்பேரி ஆகிய இரண்டு சகோதரர்களும் சம்பவ இடத்தில் இருந்ததற்கான வீடியோ காட்சிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.




