ஜனாதிபதி ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்துக்கு தீர்வு தர வேண்டும்: அன்னாராசா வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊர்காவற்துறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றையதினம்(12.1.2026) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது ஒரு பாரம்பரிய, பிரபல சுற்றுலாத்தலமாக காணப்படுகின்றது. இது ஊர்காவல்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகின்றது.
கடற்கோட்டை
இது கடற்படையினரின் கட்டுப்பட்டில் உள்ளது. இதனை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இந்த கடற்கோட்டை இருப்பது எமக்கு ஆட்சேபனை அல்ல. அல்லது தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் கடற்கோட்டை இருப்பது எமக்கு பிரச்சனை இல்லை.

இந்த கடற்கோட்டைக்கு ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து 4 நிமிடங்களில் செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது.
எனவே எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை சென்று பார்வையிடுவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும்.
சுற்றுலா பயணிகள் எமது பாரம்பரிய துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்துறை துறைமுகத்தில் இருந்து கடற்கோட்டைக்கு சென்று வருவதன் ஊடாக பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும்.
வேண்டுகோள்
அத்துடன் எமது பகுதிக்கு சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
சுற்றுலா பயணிகள் எமது பிரதேசத்திற்கு வருவதன் ஊடாக எமது பிரதேசம் வலுப்பெறும், பிரதேசம் வலுப்பெறும்போது மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும், மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் போது பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கும்.

எமது பிரதேச சபையானது வருமானம் குறைந்த ஒரு சபையாக காணப்படுகின்றது.எனவே சுற்றுலா துறையின் ஊடாக வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே ஊர்காவற்துறை துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை கடற்கோட்டைக்கு மக்கள் சென்று பார்வையிடுவதற்கு வழி வகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.