கதிர்காமத்தில் வள்ளி தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப் பெருமான்
இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட முருகன், வள்ளி தெய்வானை சமேதரராக கதிர்காமத்தில் வழிபாட்டுக்காக கடந்த சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு பழனியைச் சேர்ந்த புலிபாணி சுவாமிஜி, கதிர்காமத்தில் திருகல்யாணம் நடத்த இலங்கையர்கள் குழுவிற்கு ஆலோசனை வழங்கினார்.
விக்கிரஹங்கள் தஞ்சாவூரில் வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு, காஞ்சி மற்றும் ஆறுபடை வீட்டுகளில் பூஜைகளை நடத்தினர்.
ஜனவரி மாதம் கட்டுநாயக்கா விமான நிலைய ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முருகப்பெருமான் விமான நிலையத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள மாவை கந்தன் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாவிட்டபுரத்திலிருந்து புறப்பட்ட முருகப்பெருமான் வன்னி பெரு நிலப்ரப்பூடாக திருக்கேதீஸ்வரம் சென்றடைந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதைத்தொடர்ந்து மட்டக்களப்புக்கு சென்றடைந்து அங்கு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்று தலைநகர் நோக்கி புறப்பட்டார்.
அகில இலங்கை இந்து காங்கிரஸ், பம்பலப்பிட்டி யோகா மையம், சின்மயா மிஷன், பாணந்துறை, களுத்துறை மற்றும் காலியில் உள்ள முருகன் கோயில்களில் பூஜைகளுடன் கதிர்காமத்திற்கு சென்றடைந்தார். முருகப்பெருமானை வரவேற்கும் நிகழ்வில் மகாநாயக்கர்கள் இணைந்து வரவேற்று பிரதிஷ்டை செய்தமை இன ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
முன்பு கதிர்காமத்தில் முருகனின் வேலுக்கு பூஜை வழிபாடுகள் இடம் பெற்ற நிலையில் தற்போது முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக அருளாச்சி கொடுக்கும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பூஜை வழிபாடுகளிடம் பெறுவதுடன் விசேட நாட்களில் மகாயாகங்கள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








