காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அம்பலமான அவலம்
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் வைத்திய துறை மீதான குற்றச்சாட்டுகள் தற்போது சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிப்பட்டுக்கொண்டே வருகிறன.
அரச வைத்தியர்கள் தங்களது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நோக்கவில்லை எனவும், நோயாளிகளின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதான குற்றச்சாட்டுக்களும் தொடர்வதை இங்கு அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான ஒரு பொறுப்பற்ற நிலையே, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நோயாளர் பிரிவிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
ஆர்வலரின் ஆதங்கம்
நோயாளர்களை பார்வையிடாது, இரு வைத்தியர்கள் கடமைநேரத்தில் உரையாடிக்கொண்டிருப்பதும், வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதும் சமூக ஆர்வலர் ஒருவர் தனது முகப்புத்தக பதிவில் பதிவிட்ட காணொளியில் அம்பலமாகியுள்ளது.
வைத்தியசாலைக்கு வருகைத்தரும் நோயாளர்களை பார்வையிடும் நேரம் காலை 8மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை என தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதும், காலை 11 மணிவரை நோயாளிகளை வைத்தியர்கள் பார்வையிடவில்லை என குறித்த ஆர்வலரின் ஆதங்கம் வெளிப்பட்டிருந்தது.
கோரிக்கை
இவ்வாறான நிலைகள் இன்றுவரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முற்றுப்பெறாத ஒன்றாகவே தொடர்கிறது. மருத்துவ தேவைக்காக வரும் நோயாளிகளை தனது சுய தேவைக்காக காக்கவைப்பது வைத்தியத்துறைக்கு ஏற்புடைய காரியமா?
இந்த இடத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதன் விளைவு பொதுமக்களையே பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டவேண்டும். இந்த உண்மைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |