நாடு எதிர்நோக்கும் பெரும் ஆபத்து! கரு ஜயசூரிய முன்வைக்கும் கேள்வி
நாட்டின் நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்துமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான கரு ஜயசூரிய அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்ப்பதும் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு நாடாளுமன்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் முக்கியமானதாகும்.
உரிய நேரத்தில் தேர்தல்
இந்த நிலையில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தாய்நாடு எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியின் உண்மைத் தன்மையை ஒவ்வொரு குடிமகன் உட்பட பொறுப்புள்ள ஒவ்வொரு தரப்பினரும் சரியாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
இன்று நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உண்மையில் யார் காரணம் என்ற விவாதம் உள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதிகாரத்திற்கான சண்டை
எவ்வாறாயினும், நாடு எதிர்நோக்கும் பெரும் ஆபத்தை உண்மையாக புரிந்து கொண்டு அனைத்து தரப்பினரும் செயற்படுகிறார்களா என்ற கேள்வியை இந்த தருணத்தில் எழுப்புவதை தவிர்க்க முடியாது என்றும் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இன்று எமது நாடு அதிகாரத்திற்காக ஒருவரையொருவர் பிரித்து சண்டையிடும் சூழ்நிலையில் இல்லாமல், கூட்டுப் பொறுப்பை முன் வைத்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.
எனவே தேசியப் பொறுப்பைக் கையாள வேண்டிய மற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்
நிறுவனங்கள் மற்றும் பொதுவாக அனைத்து குடிமக்களும் காலத்தின் தேவையைப்
புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும் என்றும் சமூக நீதிக்கான தேசிய
இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான கரு ஜயசூரிய
தெரிவித்துள்ளார்.




