நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு கரு ஜயசூரிய முன்வைத்த கோரிக்கை
தற்போதைய தருணத்தில் நாட்டை பற்றி மட்டுமே சிந்தித்து, நாடு இன்று எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை முறியடிக்க ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 'சிறந்த நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு' என்ற தலைப்பில் காலியில் நடத்திய மாவட்ட மாநாடு இன்று இடம்பெற்றது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாடு
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனநாயகம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, நாடு சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த வேளையில், மாதுலுவாவே சோபித தேரர் இந்த தேசிய இயக்கத்தை 2013ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இந்த இயக்கத்தின் ஏற்பாட்டில், 19வது திருத்தம் 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சமூகத்தின் மதிப்பை நாடு பெற்றது. இதன்படி ஆட்சியை அரசியல்மயமாக்குவது நிறுத்தப்பட்டது.
மேலும் அரசாங்க அதிகாரிகள் கண்ணியத்துடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் நாட்டின் சீரழிவு, பொருளாதார சீரழிவு, ஊழல் பரவல் மற்றும் சட்டம் சீர்குலைவு என்பவற்றால் ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் என்பன 20வது திருத்தத்தின் மூலம் ஏற்பட்டன.
இந்தநிலையில், 19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்திற்கு அறிவித்துள்ளமை தற்போது பெரும் நிம்மதி அளிக்கின்றது. இலங்கை சுதந்திரம் பெற்று கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டிய நேரம் இது.
ஆசியாவில் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த நாடு, இன்று உலகத்தின் முன் ஏன் ஏழை நாடாக மாறியுள்ளது. தேசிய, மத மற்றும் அரசியல் மோதல்களால் நாட்டில் அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கும், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் சில தரப்பினர் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளால், இந்த நாடு இன்று ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடுகளை தவிர்த்து கைகோர்த்தல்
நாடு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான நேரத்தில், கருத்து வேறுபாடுகளை தவிர்த்து கைகோர்த்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். எனினும், நாடாளுமன்றத்தில் ஒற்றுமை உணர்வை இன்னும் காணவில்லை.
இந்த நெருக்கடிக்கு தீர்வாக அனைத்து கட்சி அரசாங்கத்தை உருவாக்கி குறிப்பிட்ட தெளிவான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அடிப்படை அடித்தளமும் அந்த ஆட்சியினால் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த பணிகளை நிறைவேற்றி பொதுத் தேர்தலை நடத்தி மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு உட்பட வீடுகளுக்கு தீ வைப்பு, பிற அழிவுகள் மற்றும் உயிர் சேதங்கள் போன்ற செயல்களை மன்னிக்க முடியாது.
அதேபோன்று அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகத்திற்குள் நேற்றைய தினம் சிலர் பலவந்தமாக நுழைந்ததையும் மன்னிக்க முடியாது.”என கூறியுள்ளார்.