கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளமை தென்னிலங்கை அரசியலின் சதி : பொ .ஐங்கரநேசன்
தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (28.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் உணர்வுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் பாதணி உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.
தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதணிகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.
குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
தேசிய அடையாளம்
இலங்கையில் புத்தபெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்தியவர்களும், பெளத்த சின்னங்கள் அச்சிட்ட ஆடைகளை அணிந்தவர்களும் பெளத்தத்தை அவமதித்ததாக,பெளத்த மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கார்த்திகைப்பூவும் புனிதமான ஒன்றாக, அவர்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
வடக்கில் தமிழ்ப் பாடசாலையொன்றில் விளையாட்டுப் போட்டியின்போது இல்லங்களை அழகுபடுத்துவதற்கெனக் கார்த்திகைப் பூவின் உருவத்தைக் காட்சிப்படுத்தியமைக்காகக் கல்லூரிச் சமூகமே பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் , கார்த்திகைப் பூவைப் பொறித்த பாதணிகளின் விற்பனைக்குக் பொலிஸார் எவ்வித குந்தகங்களும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |