கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! தாமதமாகும் பிரேத பரிசோதனை அறிக்கை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நினைவூட்டல் கடிதமொன்று அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் அனுப்பியுள்ளது.
மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள்
இந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்குமாறு அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு இதற்கு முன்னர் அறிவிப்பொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தடயவியல் அறிக்கை பெறப்படவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.