கனடா வாழ் ஈழத் தமிழர் ஒருவருக்கு வழங்கப்படும் யாழ்.ஜனாதிபதி மாளிகை
காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது.
கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இடையிலான சந்திப்பின்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கின் கல்வித்துறை மற்றும் தொழில்வாய்ப்பு மேம்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
உயர்தரத்திலான கல்வி வாய்ப்பு
northernuni ஆனது மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் கனடா வாழ் தமிழ் முதலீட்டாளர் இந்திரகுமார் பத்மநாதனின் நிதி முதலீட்டில் வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு சிறந்த உயர்தரத்திலான கல்வி வாய்ப்பினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வருடா வருடம் நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது சுமார் 22,600 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறுகிறார்கள்.
இருப்பினும் 4379 பேர் மட்டுமே
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள். 18289 மாணவர்கள் தகுதி பெற்றும் அவர்களுக்கான
பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத ஒரு குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.