அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி பேச்சுப் போட்டியில் கண்டி மாணவி முதலிடம்
கல்வி அமைச்சினால் இவ்வாண்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) பேச்சு போட்டி பத்தரமுல்லை இசுருபாயவில் நடைபெற்றது.
இது 2024 நவம்பர் மாதம் 03 ஆம் திகதியன்று நடைபெற்றிருந்தது.
தரம் 8 பிரிவுக்கான அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவியான பாத்திமா ஸல்மா ஹில்மி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தனது பாடசாலைக்கும் தனது இலக்கியக் குடும்பத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டி ஒழுங்குமுறை
இப்போட்டியானது முதலில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படும்.அதன் பின்னர் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும் நடைபெறும்.
மாகாண மட்டப் போட்டிகளின் இறுதியில் தேர்வான ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த முதலாம் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.
அந்த வகையில் மொத்தம் பதினெட்டுப் போட்டியாளர்களே அகில இலங்கை ரீதியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இப் பதினெட்டு போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு முதலாம் இடத்தினை மாணவி பாத்திமா ஸல்மா ஹில்மி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்துறை ஆளுமை
இவர் சிறு வயது முதல் பாடசாலையிலும் மாவட்ட மட்டத்திலும் நடைபெறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பல தடவைகளும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பாத்திமா ஸல்மா ஹில்மி தனது முதலாம் தரத்தில் கற்கும் போது "நல்ல நண்பர்கள்" என்ற ஒரு சிறுகதை நூலையும், இரண்டாம் தரத்தில் கற்கும் போது "ஏழு தேவதைகள்" என்ற இரண்டாவது சிறுகதை நூலையும் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தார்வமிக்க இவர் புத்தங்கள் வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வமிருந்தாலும் வாசிப்புக்கும் அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றார்.
தமிழ் , ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் மும் மொழிகளிலும் எழுதப்பட்ட புத்தகங்களைத் தேடி வாசிக்கும் பழக்கம் உடையவராக உள்ளார்.
அது மட்டுமின்றி கவிதைகள் புனையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி வருகின்றார் என இவ்மாணவியின் கல்வி மற்றும் துணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பில் கல்வி வட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் உரையாடிய போது அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்.
புத்தக வாசிப்புப் பழக்கம் மிக அருகிவரும் இக்காலத்தில் இவ் மாணவியின் இயல்புகள் வளர்ந்து வரும் ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.