சிங்கள மக்களை பற்றி எமது தலைவர் இதனையே கற்று தந்தார்! தமிழ் தொழிலதிபர் தகவல் (Video)
எங்களுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிங்கள மக்களை எதிரிகளாக பார்க்க கற்றுத்தரவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை உருவாக்குவது ஒரு சொற்ப அளவிலான நபர்களே எனவும் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு குழப்பம் விளைவிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் செய்தது தவறு என்றால் தெற்கில் இழைக்கப்பட்டவையும் தவறானதே எனவும் அதனை குறித்து விவாதிப்பதில் அர்த்தமில்லை.
தெற்கிலிருந்து வடக்கிற்கு வரும் அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அளித்து விட்டு கொழும்பு திரும்பிவிடுவதாகவும் பின்னர் அந்த வாக்குறுதகிளை மறந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல் கட்சி ஆட்சி பீடம் ஏறினாலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை ஸ்திரமான நிலையில் பேணுவதன் மூலமாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு தயார் எனவும், ஓர் குறிப்பிட்ட தரப்பினரே தங்களது இருப்பிற்காக இவ்வாறு குழப்பங்களை விளைவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் பாஸ்கரன் வழங்கிய நேர்காணலின் அடுத்த பகுதி…
சதுர- இந்த நிறுவனத்தில் இருந்து நேரடியாக எத்தனை பேர் சம்பளம் பெறுகின்றனர்.
பாஸ்கரன்- எமது நிறுவனத்தில் இருந்து நேரடியாக 300 பெயர் சம்பளம் பெறுகின்றனர். அதற்கு மேலதிகமாக பல்வேறு வெளி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்த கட்டுமான பணிகளில் தற்பொழுது சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர் என நான் நினைக்கின்றேன்.
சதுர- பொதுவாக இலங்கையின் அபிவிருத்தியை தொடர்பில் உங்களது அபிப்பிராயம் என்ன?
பாஸ்கரன்- இலங்கையை உண்மையில் சொர்க்கம் என்று கூறலாம் நான் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். இலங்கை என்பது ஓர் கொடையாகும். எங்களுக்கு இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு.
புலம்பெயர் மக்களிடம் அதிக அளவு பணம் உண்டு நாட்டில் அதிகளவான வளங்கள் காணப்படுகின்றன. இந்த வளங்களைக் கொண்டு இலாபமீட்ட முடியும். என்னிடம் இதற்கெல்லாம் சரியான திட்டம் ஒன்று இல்லாமையே பிரதான பிரச்சனையாகும்.
முதலாவதாக சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் முதலில் தாய் நாட்டை நேசிக்க வேண்டும்.
இரண்டாவதாக நாம் அனைவரும் நாட்டை எவ்வாறு கட்டி எழுப்புவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். எனினும் எங்களது அரசியல்வாதிகளிடம் அந்த சிந்தனை, ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்கே உரிய சிந்தனை போக்கு மனநிலை செயல்திட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளனர்.
நீண்ட காலம் எவ்வாறு அரசியலில் இருப்பது அரசியலில் எவ்வாறு பணம் உழைப்பது என்பது பற்றியே அதிக அளவில் சிந்திக்கின்றனர். இந்த முறை மாற்றம் பெற வேண்டும். இந்த சிந்தனைப் போக்கு மாற்றம் பெற வேண்டும்.
அனேக சந்தர்ப்பங்களில் மக்கள், சிங்கப்பூரின் பிரதமர் லீகுவான் சிங்கப்பூரை இலங்கை போல மாற்ற வேண்டும் என கூறியதாக குறிப்பிடுகின்றனர்.
இலங்கையில் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் சிங்கப்பூரின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியும் ஒப்பிட்டு பாருங்கள். 50 ஆண்டுகளில் ஒரு லீகுவான் பாரிய மாற்றத்தை செய்திருந்தார்.
இந்த நாட்டுக்கும் ஒரு லீகுவான் போன்ற ஒரு தலைவர் தேவை. அவ்வாறான ஒரவரினால் இந்த நாட்டை மாற்றி அமைக்க முடியும். எமக்கு 50 ஆண்டுகள் தேவை இல்லை எமக்கு 20 ஆண்டுகள் போதுமானது.
ஒரு பொதுவான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டுகளுக்கு அதே திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நான் ஒரு ரோட் மேப்பை உருவாக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கான திட்டமாக அது அமைய வேண்டும்.
நீங்கள் ஐந்தாண்டுக்கு ஆட்சிக்கு வருகின்றீர்கள் அவர் ஐந்தாண்டுகளுக்கு வருகின்றார் மற்றும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வருகின்றார். யார் ஆட்சிக்கு வந்தாலும் அது பற்றி கவலை இல்லை அவர்கள் இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
20 ஆண்டுகளில் நாம் எவ்வாறான இலக்கினை எட்ட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரம் எவ்வளவு முன்னேற வேண்டும் என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டும். யார் வந்தாலும் எந்த அரசியல்வாதி வந்தாலும் எந்த ஜனாதிபதி வந்தாலும் பொருளாதார வளர்ச்சியுடன் பயணிக்க வேண்டும். அதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
இங்கு அவ்வாறில்லை! இங்கே பொதுவான ஒர் திட்டமில்லை. பிரச்சனைகளை உருவாக்கவே மக்கள் இருக்கின்றனர். தமிழர்களாகிய நாம் சிங்கிள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் ஏற்கனவே சிங்களவர்கள் பலருடன் வேலை செய்கின்றோம், தனிப்பட்ட ரீதியில் எனக்கு பல சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள் சகோதரர்கள் போன்று சிங்களவர் நண்பர்கள் இருக்கின்றார்கள்.
நாங்கள் ஒன்றாக விளையாடுவோம், நாங்கள் ஒன்றாக சாப்பிடுவோம், சிங்களவர்கள் எங்களது எதிரிகள் அல்ல வியாபாரம் ஒன்றாக இணைந்து செய்வோம், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.
எனினும் ஒரு சிலர் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். அவர்களது நன்மைக்காக இவ்வாறு பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். எப்பொழுதுமே எங்கட தலைவர் எங்களுக்கு சொல்லித் தந்தது, திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், சிங்கள மக்கள் எங்களது எதிரிகள் அல்ல என எமக்கு கற்றுத் தந்திருக்கின்றார்.
எப்பொழுதெல்லாம் அவர் உரையாற்றினாரோ அப்பொழுதெல்லாம் விசேடமாக அவர் இதனைக் குறிப்பிடுவார். சிங்கள மக்கள் எமது எதிரிகள் அல்லர் அவர்கள் எங்களது சகேதரர்கள் என கூறியிருக்கின்றார். சகோதர சகோதரிகளாக வாழ வேண்டுமென கூறியிருக்கின்றார்.
சதுர- எனினும் அவர் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தெற்கில் வாழ்வோருக்கு எதிராகவும் பல்வேறு விடயங்களை செய்துள்ளார்.
பாஸ்கரன்- ஆம், உருவாக்கப்பட்டது. ஏன் அவர்கள் அவ்வாறு ஆரம்பித்தார்கள்? அது பழைய விடயம். அது பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. அது பற்றி பேசினால் உங்களது பக்கத்திலிருந்து அவர் பிழை செய்ததாக கூறுவீர்கள், நான் எனது பக்கத்திலிருந்து உங்களது மக்கள் தவறிழைத்து விட்டதாக கூறுவேன்.
எனினும், இந்த இரண்டு சமூகங்களையும் வளர்ச்சியடைய வேண்டும், நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
அவ்வாறான ஓர் பின்னணியில் சீனாவிடமும் இந்தியாவிடமும் கடன் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எங்களினால் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
நாங்களே எங்கட பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு எமது நாட்டை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு இங்கு வளங்கள் காணப்படுகின்றன, அவ்வளவிற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
எனினும் இதனை அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் எங்களுக்கு உள்ள பிரச்சினைகளை அவர்கள் ஆராய வேண்டும். ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் இந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
சதுர- இந்த நாட்டில் காணப்படும் இனவாத நிலையிலிருந்து விடுபட்டு ஒரு இடத்திற்கு வந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பாஸ்கரன்- கடந்த நூறு ஆண்டுகளாகவே ஏதேனும் ஓர் நல்ல விடயம் நடந்தால் யாரேனும் அதனை குழப்பிவிடும் சூழ்நிலை நிலவி வந்துள்ளது. அந்த விடயத்தில் குறுக்கே புகுந்து குழப்பிவிடுவார்கள். அவர்களது நலனுக்காக அவ்வாறு செய்வார்கள். இது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
இப்போதும் அரசாங்கத்திற்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விருப்பம் உள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறை வேண்டுமென கருதுகின்றது. எனினும் சிலர் அதனை விமர்சனம் செய்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தடை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
ஒரு தரப்பினர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென விரும்பினாலும், சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சிப்பார்கள். இதனை யார் குழப்புகின்றார்கள் என பார்த்தால் அது சிறிய அளவிலானவர்களாகவே காணப்படுவர்.
ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களிடம் கேட்டால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றே கருதுகின்றனர்.
போர் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். 1980 மற்றும் 1983களில் அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புலம்பெயர்ந்தனர். ஏதோ ஓர் வகையில் அவர்கள் தற்பொழுது நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்து வருவோரிடம் ஓரளவு பணம் உள்ளது.
சேமிப்பு, காப்புறுதி அல்லது வரி ஏதாவது ஓர் வழியில் சேமிப்பு இருக்கும். நிறைய பேர் இங்கு வந்து வாழ வேண்டுமென விரும்புகின்றார்கள். இப்போதும் நீங்கள் அவ்வாறானவர்களை பார்க்க முடியும். அவ்வாறு சென்றவர்களில் பலர் தற்போது ஓய்வு வயதினை அடைந்துள்ளனர், அவர்களது பிள்ளைகள் திருமணம் முடித்து தனியாக வாழத் தொடங்கிவிட்டனர். அவ்வாறானவர்கள் நாடு திரும்பி நிம்மதியாக வாழ விரும்புகின்றனர்.
எனினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதெனும் சம்பவங்கள் இடம்பெறும்போது அந்த திட்டங்கள் வீணாகின்றன. நான் உங்களுடன் முதல் தடவை பேசிய போதும், மக்கள் அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை அதனாலேயே கூறினேன்.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் அங்கிருக்கும் மக்களை இங்கு அழைத்து வரவேண்டும். அங்கு இருக்கும் காசுப் பாய்ச்சலை இங்கு கொண்டு வர வேண்டும். இங்குள்ள வியாபாரங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் மக்களுக்கு ஒர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தற்பொழுது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு இராணுவ முகாம்கள் காணப்படுவதாக நீங்கள் ஆரம்பத்தில் என்னிடம் கூறினீர்கள்.
கடந்த 14 ஆண்டுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றனவா?
சதுர- இதனைத்தான் தேசிய பாதுகாப்பு என்கின்றோம். கடந்த கால புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் 50 தடவைக்கு மேல் முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர்கள் புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து மீண்டும் எல்ரீரீஈயை உருவாக்க முயற்சித்துள்ளனர்.
பாஸ்கரன்- நான் அவ்வாறு கேள்விபட்டதே இல்லை.
சதுர- தெற்கு பத்திரிகைகளில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
பாஸ்கரன்- ஆ… செய்தித்தாள்களிலா அவை அரசியல், இராணுவத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.
கடந்த 14 ஆண்டுகளில் எல்ரீரீஈ அல்லது இராணுவத் தரப்பில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.
இராணுவம் தனது கடமைகளை செய்கின்றது. புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது போர் பற்றி சிந்திப்பதில்லை. எதிராக இருக்கும் தரப்பினர் பிரச்சினைகளை உருவாக்கின்றனர்.
அவர்கள் எல்ரீரீஈ வருவதாக பிரச்சாரம் செய்கின்றனர். இராணுவத்தைக் கேட்டாலும் அவர்களுக்கும் ஒரு வேலையில்லை என்றே கூறுவார்கள், அதனால்தான் அவர்கள் வீதிகளை சுத்தம் செய்கின்றார்கள். அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என கூறுவார்கள். இதை எல்லாத்தையும் நாம் மாற்ற வேண்டும்.
அதிகளவான காணிகள் இராணுவத்திடம் காணப்படுகின்றது. பொதுமக்களின் காணிகள் இவ்வாறு இராணுவத்திடம் உள்ளன. அந்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
மாதுளமோ மாவோ ஏதாவது ஒர் மரத்தை வைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும். மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவார்கள். பொருளாதார ரீதியில் அவர்களுக்கு ஒர் உத்தரவாதம் இருக்க வேண்டும்.
என்னிடம் 100 தென்னம் மரங்கள் உண்டு. இதில் எனக்கு வருமானம் உண்டு என மக்கள் நினைப்பார்கள். இவ்வாறான நிறைய விடயங்களை அரசாங்கம் சேர்ந்து செய்ய வேண்டும்.
தெற்கிலிருந்து வரும் அரசியல்வாதிகள் எமது மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளனர், காணிகளை விடுவிக்கின்றோம், அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என கூறுகின்றனர். எனினும் அதன் பின்னர் அவர்கள் வருவதில்லை.
ஒரு மாதத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தேன். அவர் எனது காரியாலயத்திற்கு வந்தார். நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன். நீங்கள் இங்கு வருகின்றீர்கள் வாக்குறுதி அளிக்கின்றீர்கள் பின்னர் திரும்பி விடுகின்றீர்கள் என கூறினேன்.
அனைத்து அரசியல்வாதிகளும் இதனையே செய்கின்றார்கள் அவர்கள் வருகின்றார்கள் மக்கள், ராஜதந்திரிகளை சந்திக்கின்றார்கள். ஊடகவியாளர்கள், மருத்துவர்கள் என பலரையும் சந்திக்கின்றார்கள். அவர்கள் பல வாக்குறுதிகளை அளிக்கின்றார்கள். எனினும் அவர்கள் திரும்பியதும் அனைத்தும் மறந்து விடுகின்றார்கள். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்தே இங்கு வருகின்றார்கள்.
சதுர- இது உண்மை என்றே தென்படுகின்றது. 13 தருகின்றோம் என்றார்கள் 13 பிளஸ் தருவதாக கூறினார்கள். பின்னர் சர்வகட்சி தீர்வு வழங்குவதாக கூறினார்கள். ஜனவரி மாத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக கூறினார்கள். ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக தீர்வு வழங்குவதாக கூறினார்கள். காணிகளை விடுவிப்பதாக கூறினார்கள். நான் உண்மையில் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபராக சிந்திக்கவில்லை.
பிரச்சினை இருந்தால் அதனை தீர்ப்பதற்கு மெய்யான அவசியம் இருக்க வேண்டும். இந்த மெய்யான நோக்கம் அரசியல்வாதிகளிடம் இல்லை என ஐயா கூறுவதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லையனன்றால் இவ்வாறு நடைபெறாதல்லவா.
இதில் இராணுவ முகாம்களை அகற்றுவதா அவ்வாறு அகற்றினால் அவற்றை எங்கு ஸ்தாபிப்பது. பாதுகாப்பிற்காக ஸ்தாபிப்பது என்றால் விசேட இடங்களில் எவ்வாறு ஸ்தாபிப்பது. ஏனைய விடுவிப்புக்கள் எவ்வாறு செய்வது? உயிரிழந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ்வழங்குவது எவ்வாறு? உயரிழந்தவர்களுக்கு குறைந்தபட்சம் மரண சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமல்லவா? நட்டஈடு வழங்குவதா? போரின் பின்னர் 14 ஆண்டுகள் கடந்துள்ளன.
இவர்கள் கேள்வி எழுப்பும் போது தெற்கில் இருப்பவர்கள் என்ற ரீதியில் வடக்கிலிருந்து சிந்திப்பதா அல்லது தெற்கிலிருந்து சிந்திப்பதா என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
இராணுவ முகாம் பற்றி பேசப்படுகின்றது. தெற்கிலும் முகாம்கள் காணப்படுகின்றன. அவை தேசியப் பாதுகாப்பிற்கானவை. வடக்கிலும் முகாம்கள் இருக்க வேண்டும் அவை அனைத்தையும் அகற்றிவிட முடியாது. இங்கு இருக்கும் வியாபாரிகள் மற்றும் மக்கள் நினைக்கும் விதத்தையே இவர் பிரதிபலிக்கின்றார். இந்த விடயங்களை தெரிந்து கொள்ளாது எம்மால் தீர்வுத் திட்டங்களை எட்ட முடியாது.