முன்னாள் எம்பி கனகசபையின் மறைவு பேரிழப்பாகும் - சிறீதரன் எம்.பி இரங்கல்!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபையின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அவர் காலத்தில் நான் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.
கடந்த 2004ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கனகசபை தெரிவானார்.
அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசியபட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் நாடாளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும். அந்த தேர்தலில் வடகிழக்கு எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களை தெரிவு செய்தனர். அதில் ஒரு நிர்வாக அதிகாரியா இருந்த கனகசபையும் தெரிவானார்.
யுத்த காலம்..
அந்த காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும் கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்த காலம்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதனால் ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் எம் பி சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்போது 22, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர்.
அப்போது 2006, நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்திற்கு மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என கனகசபை, அவர்களுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்தியின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார்.
அந்தப்பயம் காரணமாக 2010, தேர்தலில் வேட்பாளராக சம்மதிக்கவில்லை அதற்க்கு பின்னர் அவர் எந்த தேர்தல்களிலும் ஈடுபடவில்லை அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டு கூறினார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாக சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86, அகவையில் இறையடி சேர்ந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரினை பகிர்ந்து கொள்கிறேன் தெரிவித்துள்ளார்.



