தமிழினத்திற்கு அதிகரித்த நெருக்கடி! தன்மானம் பார்க்காமல் ஒற்றுமைக்காக போராடிய தலைவர்
தந்தை செல்வா, தமிழினத்திற்கான நெருக்கடி அதிகரித்த போது தன்மானம் பார்க்காமல் தானே இறங்கிப் போய் ஜீ.ஜீ. பொன்னம்பலத்துடன் பேசி தமிழ்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி காட்டியதாக கம்பவாரதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
தமது உரலார் கேள்வி மற்றும் உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
உரலார் கேள்வி :- தந்தை செல்வாவின் 126வது ஜெயந்திதின விழாவில் கலந்து கொண்டீர்களாக்கும். தந்தை செல்வா தமிழ்மக்களால் போற்றப்பட்டமைக்கான சில காரணங்களை எடுத்துவிடுங்களேன் பார்ப்போம்.
உலக்கையார் பதில் :- மலையகத் தமிழர்களுக்கான பிரஜா உரிமையை, சிங்கள அரசு பறிக்க முற்பட்டபோது அதற்கு ஆதரவு தர முன்வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களை எதிர்த்து, கட்சியை விட்டு வெளியே வந்து, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த அவரது செயல் வடக்கு கிழக்கு தமிழர்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த செய்ய முன்னோடி செயலாய் அமைந்தமை.
தமிழினத்திற்கான நெருக்கடி
தமிழினத்திற்கான நெருக்கடி அதிகரித்த போது தன்மானம் பார்க்காமல் தானே இறங்கிப் போய் ஜீ.ஜீ. பொன்னம்பலத்துடன் பேசி தமிழ்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி காட்டிய பெருந்தன்மை. கட்சி பணத்தைத் தனக்காக்க முயலாமல், தன் பணத்தை கட்சிக்காக்கிய தியாகம்.
தனக்கென வந்த எந்த அன்பளிப்பையும் பெற்றுக்கொள்ளாமல், அவற்றை நிராகரித்து பொதுமக்களுடன் பேருந்தில்கூடப் பயணிக்கத் தயங்காத அவரது சுய ஒழுக்கம்.
சமஷ்டியை தமிழர்களின் கோரிக்கையாய் முன்வைத்தாலும் காலச் சூழ்நிலைக்கேற்ப அக் கொள்கையில் விட்டுக் கொடுப்புக்களை செய்ய தவறாத அவரது தீர்க்க தரிசனம்.
பதவி போட்டி
நாடாளுமன்றில் பேரினத்தாராலும் மதிக்கப்பட்ட தனி தகுதி. மற்றவர்களைத் தூண்டிவிட்டு தான் பின்னிற்காமல் தானே முன்னின்று போராட்டங்களை நடாத்திய வீரம்.
இப்படி அவரது பெருமைக்கான காரணங்களை வரிசைப் படுத்திகொண்டே போகலாம்.
பதவி போட்டியால் கட்சி அழியப்போவது பற்றிக்கூடக் கவலைப்படாமல் இருக்கும் தலைவர்கள், தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை எடுத்துப் படிக்க வேண்டும்.
சல்லடையார் சலிப்பு - தந்தைபோல் இருந்தால் உலகினில் நம் தலைவர்க்கு இத் தாழ்வெல்லாம் வருமோ ஐயா? ஹி..ஹி…ஹி. இது எப்படி இருக்கு?