பல மாணவிகள் துஷ்பிரயோகம்! 16 வீடியோ பதிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் கைது
களுத்துறையில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பதிவுகளின் அடிப்படையில் விசாரணை
சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை களுத்துறை வடக்கு பகுதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டதை அடுத்து அவரை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த ஆசிரியர், மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று அவர்களை காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.