கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டனர்.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
நிர்வாக உரிமை
“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற 29 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும் வாழுகின்ற பொதுமக்கள் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒழுங்கமைத்து போராட்டம் நடத்தப்படுகிறது.
உரிமைக்கான மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 174 வது நாளாகவும் எமது இலக்கு நோக்கி எமது மக்களுடைய அபிலாசைகளோடு அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிடல்களோடு தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.
அது மாத்திரமில்லாமல் போராடுகின்ற மக்கள் சார்பாக அன்று நடைபெறுகின்ற போராட்டம் தொடர்பிலான ஆதாரங்களோடும் எமது மக்களுடைய கோரிக்கைகளோடும் அனைத்து சிவில் சமூகக் கட்டமைப்பினுடைய இறப்பர் முத்திரையோடு தொடர்ச்சியாகவும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர்.மாவட்ட செயலாளர் என பல தரப்பினருக்கும் எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்பியுள்ளோம்.
கோரிக்கைகள்
ஒரு சில பதில்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் அமைச்சின் செயலாளர் போன்றவர்களிடமிருந்தும் மாவட்ட செயலாளரிடமிருந்தும் கிடைத்திருந்தது.
இருப்பினும், அவைகளிலே எது விதமான திருப்தியும் எங்களுக்கு இல்லை.
எங்களுடைய கோரிக்கைகளுக்குரிய பதிலாக அவைகள் அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு அதையும் கடந்து தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் உரிமைக்காக வீதியில் இறங்கிக் குரல் கொடுத்து அமைதி வழியில் போராடுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |