கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் தீர்க்கமானதொரு முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார்.
கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும், நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று நாடாளுமன்றில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள்

இதற்கமைய, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான குழப்பநிலை மற்றும் அண்மைய பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து கல்முனை தமிழ்ப்பிரிவு அகற்றப்பட்டமை, நீண்டகாலமாக இருந்து வருகின்ற கணக்காளர் நியமிக்கப்படாத பிரச்சினை, காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் கல்முனை
வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகக் குழப்பங்களுக்குச் சரியானதொரு
தீர்க்கமான தீர்வை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.