கோட்டாபய பெற்ற வாக்குகளை காட்டிலும் சமஸ்டி தீர்வுக்காக தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் அதிகம்! கஜேந்திரகுமார் (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , கடந்த ஜனாதிபதி தோ்தலில் பெற்ற 69 லட்சம் வாக்குகளை காட்டிலும் வடக்குகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ள உறுப்பினர்கள், தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற தென்னிலங்கையின் வாக்குகளை பொறுத்தவரையில், அது, மொத்த வாக்குகளில் 60 சதவீதமாகும்.
எனினும் வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் சமஸ்டி தீர்வுடன் கூடிய தமிழ்தேசத்துக்காக தமிழ் கட்சிகள் பெற்ற வாக்குகள் 75 சதவீதத்துக்கும் அதிகமானதாகும்.
அதிலும் வடக்குகிழக்கில் தெரிவாகி, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐந்து பேரில் மூன்று பேர் தமிழ் தேசத்தின் உரிமைகளுக்காகவே வாக்குகளை கேட்டனர்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒவ்வொரு தேர்தல் சுவரொட்டியிலும் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கியிருந்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
எனவே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை இழந்தநிலையில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் அளித்த ஆணையை கைவிட்டு, கோட்டாபய ராஜபக்சவின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு வடக்குகிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு தரமாட்டார்கள் என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஜனாதிபதியும், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டு அரசாங்கத்தின் இனவாத கொள்கைக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.