வலுக்கும் கச்சதீவு விவகாரம்: ஸ்டாலினின் பதிலுக்கு யாழ். கடற்றொழிலாளர்கள் அதிருப்தி
கச்சதீவை மீட்போம் என தமிழக மீனவ மக்களிடம் கூறும் தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர்க்கு இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியுமா என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன பிரதிநிதி மகேஷ் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (26.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய பிரச்சனையை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற நிலையில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
எம்.கே. ஸ்டாலினின் கருத்து
2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியா கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவை படகு நடவடிக்கைகளை நிறுத்துமாறு பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு கச்சதீவை மீட்பது தான் வழியென கூறியுள்ளார்.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் குப்புசாமி அண்ணாமலையும் இந்தியா கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கச்சதீவை மீட்பதற்கு மோடி அரசு தலையீடு செய்யும் என கூறியிருந்தார்.
நான் இவர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். கச்சதீவை இந்தியாக்கு வழங்கிவிட்டால் வடபகுதி கடலில் இந்தியா கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையைகட்டுப்படுத்த முடியுமா? கச்சதீவு எங்களிடம் இருக்கின்ற போது காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் குதிரைமுனை மற்றும் திருகோணமலை வரை இந்திய கடற்தொழிலார்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் கச்சதீவில் நிரந்தரமாக இந்திய கடற்றொழிலாளர்களை தங்க விட்டால் இலங்கையின் முழுக்கடலையும் நாசப்படுத்தி கடற்தொழிலை மேற்கொள்ளும் மக்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள்.” என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |