கோட்டாபய ஜனாதிபதியாவாரென சஹ்ரானுக்கு தெரியாது: தெரிந்திருந்தால் இதுவே நடந்திருக்கும் - சுனில் ஹந்துனெத்தி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொள்வார் என சஹ்ரானுக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கோட்டாபய ராஜபக்சவையும் கட்டிப்பிடித்துக் கொண்டே உயிரிழந்திருப்பார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து எவருக்கும் கரிசனை கிடையாது.
நாமல் ராஜபக்சவாக இருக்கட்டும் அல்லது சஜித் பிரேமதாசவாக இருக்கட்டும் இவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து கரிசனை இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைக்காட்சியில் தோன்றி நகைச்சுவையூட்டுகின்றார். கட்சிப் பிரச்சினைகள் பற்றி மட்டுமே அவர் பேசுகிறார்.
பொருளாதார, உணவு பிரச்சினை, மருந்து பிரச்சினை பற்றி அவர் எதுவும் பேசுவதில்லை. தற்பொழுது நாட்டில் சனல் 4 ஊடகத்தின் காணொளியை வெளிப்படுத்தி உள்ள நிலையில் ஏனைய அனைத்து பிரச்சனைகளும் மூடப்பட்டுள்ளன.
இழிவான அரசியல் கலாசாரம்
பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு, பேருந்து கட்டண உயர்வு மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசப்படுவதில்லை.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இன மத கலவரங்களை உருவாக்கும் மிக இழிவான அரசியல் கலாசாரம் நிலவுகிறது. எனவே நாட்டின் அரசியல் முறைமையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |