ஜே.வி.பி.13வது திருத்தச் சட்டம் தொடர்பிலான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்-சன்ன ஜயசுமண
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ள போல், இன்னும் சில வாரங்களுக்குள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுதுவதற்காக தேசிய மக்கள் சக்தி இணங்குமா இல்லையா என்ற விடயத்தை தாமதமின்றி வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மதவாச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
13வது திருத்தச்சட்டத்தின் பின்விளைவுகளை புரிந்துக்கொண்ட ஜனாதிபதிகள்
13வது திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஓரளவுக்கு புரிந்துக்கொண்டதன் காரணமாகவே ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் கோட்டாபய ராஜபக்ச வரை பதவியில் இருந்து ஏழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த சட்டம் குறித்து அப்போது தீர்ப்பு வழங்கியிருந்த உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதியரசர்கள் 13வது திருத்தச் சட்டம் காரணமாக நாட்டின் ஒருமைப்பாடு இல்லாமல் போகும் என கூறியிருந்தனர்.
மேலும் நான்கு நீதியரசர்கள் அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பிரச்சினையாக இருக்காது என்றும் ஒரு நீதியரசர் சில ஷரத்துக்களுக்கு உட்பட்டால் ஒருமைப்பாட்டை பாதுகாக்கலாம் எனக்கூறியிருந்தார்.
13வது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக அர்த்தப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர். ஜெயவர்தன செய்த மோசடி பற்றி அமைதியாக இருப்பது ஏன்?.
ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளியிட வேண்டும்
1987 ஆம் ஆண்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது அதனை கடுமையாக எதிர்த்து நாட்டில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் சேதங்களை, சொத்து சேதங்களை ஏற்படுத்தி உயிர் தியாகத்துடன் செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளியிட வேண்டும்.
தமக்கு சம்பந்தமில்லாத விடயம் போன்று மக்கள் விடுதலை முன்னணி தற்போது தம்மை தற்காத்து கொண்டிருப்பது பாரதூரமான மோசடி.
அதேபோல 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது தற்போதைய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அவர் தற்போது என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளார்?.
மேலும் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வந்த தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன, ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை நாட்டு வெளியிட வேண்டும் எனவும் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.