கோட்டாபயவிற்காக காத்திருக்கும் நீதியமைச்சர்: பதவி விலகுகிறாரா அலி சப்ரி?
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழு சம்பந்தமாக கலந்துரையாட நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஸ்கொட்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார். இந்த நிலையில், நீதியமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழு வரைவு யோசனை ஒன்றை உருவாக்கி, அதன் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்க உள்ளமை தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமிப்பது சம்பந்தமாக நீதியமைச்சர் சப்றியிடம் ஆலோசனைகள் பெறப்படவில்லை என தெரியவருகிறது. எவ்வாறாயினும் இந்த நியமனம் தொடர்பாக நீதியமைச்சர் இன்னும் திருப்தியடையவில்லை எனவும் அவர் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடவே ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு சம்பந்தமாக முஸ்லிம் சமய தலைவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் காரணமாக அலி சப்ரி நீதியமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலக தீர்மானிக்கவில்லை என அலி சப்ரி, ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri