நீதி அமைச்சர் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது..! எதிர்க்கட்சி பகிரங்கம்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் கூறியுள்ளதாகவும் அதனுடன் அவர் நின்று விடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்பது மட்டுமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தற்காலிக அடிப்படையிலேனும், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுவில் இத்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் அளித்து தனது குற்றமற்ற தன்மையை நிரூபித்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே எதிர்கட்சியின் கோரிக்கை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறு நடந்தது என்று கூறி பொறுப்பு கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அவ்வாறான பிரச்சினைகளை மாற்றி அமைப்பதாக வாக்குறுதி அளித்து வந்த அரசாங்கம் அதேவிதமான அணுகுமுறைகளை பின்பற்றுவது ஏற்புடையதல்ல என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.